Archive for ஒக்ரோபர் 9, 2007
இருவர்
இடம் :சேலம் மாவட்டம், தாராப்புரம்..
ஆண்டு :1987 லிருந்து 1989
————————————-
” பவளம்… அருண் வந்துட்டானா..? ”
“வந்துட்டாங்க.. வெளில விளையாடிட்டு இருக்கான்..”
“ஏண்டி உனக்கு கொஞ்சமாச்சும் அறிவிருக்கா..? சாயந்திரம் வந்த உடனே ஹோம் ஒர்க் எல்லாம் முடிக்க வைக்கனும்னு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்..உன் காதுல எதை வைச்சிட்டு இருக்க.. எருமை மாதிரி நிக்கதான் லாயக்கு.. நாள் முழுக்க டிவி பாரு..சனியன் பிடிச்சவளே..போய் அந்த நாயை கூட்டிட்டு வாடி…”
“இப்பதான் வந்தாங்க.. கொஞ்ச நேரம் கிரிக்கெட் விளையாட்றேன்மான்னு கெஞ்சினான். ………………..”
“ஏய்..இங்கே வாடா.. அறிவிருக்காடா உனக்கு..? இனிமே விளையாட போனே..கால ஒடச்சிடுவேன். +2 படிக்கிற.. மனசுல பயமிருக்கா..? கிருஷ்ணன் வாத்தியார் பொண்ணு மூத்திரத்த குடிச்சா கூட உனக்கு அறிவு வராது.. என்னை சொல்லனும்.. உன்னை எல்லாம் டாக்டராக்க நினைச்சேன் பாரு.. செருப்பாலயே என் புத்திய அடிக்கனும்.. ..நல்லா கேட்டுக்க.. இதான் உனக்கு கடைசி வார்னிங்.. இனிமே எவனாவது தெரு பசங்ககூட விளையாட்றத பாத்தேன். அவ்வளவுதான்..இதான் கடைசி..”
————————————-
“ஏங்க.. ராஜேஷ் என்னங்க கணக்குல ரொம்ப வீக்கா இருக்கான்..”
“யாரை கணக்கு பண்ணான்..அவன் சின்ன பையண்டி..”
“சும்மா வாய கழுவுங்க.. நான் சொன்னது மேத்ஸ்..”
” தெரியும்டி மஹாலஷ்மி. நானும் அவனோடா க்ளாஸ் டீச்சரை பாத்து பேசினேன்..அவரும் சொன்னார்..மேத்ஸ் மட்டுமல்ல.. எவ்வளவு ட்ரை பண்ணினாலும் சுமாராதான் படிக்கிறான் என்று சொன்ன்னார்..அவனை அடிச்சு படிக்க வைச்சாலும் புரயோசனமில்லன்னு சொல்றார்..”
“அடிச்சி படிக்க எல்லாம் வேண்டாங்க.. அவனுக்கு இயல்பா படம் வரையறது.. அனிமேசன் பண்றது மாதிரி் ஆர்வமா இருக்கான்னு தோணுது.. அதுலயே அவனை வளர்த்துவிட்டா நல்லா இருக்கும்..சரியாவும் இருக்கும்.. ”
“ஆமாம் லஷ்மி. உனக்கு கூட சிலசமயம் மூளை அழகா வேலை செய்யுது..”
“ஆனால் எல்லா நேரமும் புத்திசாலிதனமா வேலை செய்யறதில்லைங்க.. அப்படி இருந்திருந்தா உங்களை போய் லவ் பண்ணி தொலச்சிருப்பேனா..?”
“ஆமா லஷ்மி. அப்பாவியான நானும் தப்பிச்சு இருப்பேன்.. பேய்கூட எல்லாம் வாழ்க்கை நடத்திட்டு இருக்கேன் பாத்தியா.. என்னை பாத்தா உனக்கே கூட அழுகை வரும்.. இப்ப கூட ஒண்ணும் குறைஞ்சு போய்டல.. கம்முனு டைவர்ஸ் பண்ணிடலாமா..”
“போடாங் …”
————————————-
“என்ன விசயம்.. ஏன் சுவத்தை நோண்டிட்டு இருக்க..?”
“உங்கிட்ட பேசவே வரவர பயமா இருக்கு.. நான் கேட்டா கோச்சுப்பீங்களா..”
“சனியனே..என்ன வேனும் சொல்லு. உன்கிட்ட மல்லுக்கட்றதை விட நாலுவீட்டுக்கு எருமை மேய்க்க போகலாம்.”
“நம்ம பையன பாத்தா பாவமா இருக்கு.. அவன் க்ளாஸ்ல எல்லாம் டூர் போறாங்களாம்.. ரெண்டுநாள் டூராம்…!”
“அவன் சொன்னானா.. இல்ல நீ அவனுக்காக கேட்கிறியா..? எங்கே அவன்..? கூப்பிடு..”
“என்னடா மன்சுல நினைச்சுட்டு இருக்க..? காலாண்டு பரிட்சைல என்ன மார்க்கு….980 மார்க் எடுத்திருக்க.. சோறுதானே தின்ற..? இப்ப சாருக்கு அவசியம் டூர் போகனுமா..? இந்த ஊர் சுத்துற மயிரு எல்லாம் ஒண்ணும் வேணாம்.. மூடிகிட்டு படி…டூராம் டூரு”
“இல்லப்பா.நான் கேட்லப்பா. ஸ்கூல்ல எல்லாம் போறாங்கன்னு எங்க டீச்சர் உங்ககிட்ட கேட்க சொன்னாங்க..”
“அவனுக்கென்ன மாசமான சம்பளம் வந்துடும். இதுமாதிரி வாத்தியாரை எல்லாம் நடுவீதீல வைச்சி கொளுத்தனும்…பரதேசிங்க. தானும் கெட்டு பசங்களையும் கெட்டு குட்டிசுவராக்கிட்றானுங்க.. ”
“……………………….”
“ஏய் நில்லு..இனிமே இதுமாதிரி ஊர்சுத்த ஏதும் நினைச்சா மகன்னு கூட பாக்காம கொன்னேபுடுவேன்…ஒழுங்கு மரியாதையா படி…”
————————————-
“லஷ்மி… ராஜேஷும் நானும் பக்கத்தது ஊரு திருவிழாவுக்கு போய்ட்டு வரோம். நீயும் வரியா. பைக்ல பின்னால இடம் இருக்கு..”
“வேண்டாங்க.. நான் எதுக்கு.. நீங்க ரெண்டு பேரும் போய்ட்டு வாங்க.. ஆனால் சீக்கிரம் வந்துடனும்..”
“வரமுடியாதுடி.. அப்படியே உன் சக்களத்தி வீட்டுக்கு போய் சாப்பிட்டுட்டு ரெண்டுநாள் இருந்துட்டு வரோம்..”
“ஓ..அப்படியா.. அப்படின்னா நானும்..”
“அடியே வாய மூடு.. மானம்கெட்டவளே.. பக்கதுல பையன் இருக்கான்னு கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா..”
“இந்த பயம் இருக்கட்டும்.. நீயும் பேசினா நானும் பேசுவேன்..”
“அது தெரியுமே.. உனக்கு மட்டும் வாயில்லன்னா நாய் தூக்கிட்டு போய் இருக்கும்.. சரி சரி..கிளம்பட்டுமா ல்ட்சுமி..?”
“சரிங்கடா.. ரெண்டுபேரும் பாத்து போய்ட்டு வாங்க..”
“அப்பா.. அம்மாவை உன்னையும் டா போட்டு கூப்பிட்றா..”
“ஏண்டா இப்படி பச்சையா சொல்லி மானத்தை வாங்கிற..மெதுவா பேசு..சிரிக்காதடி ”
“கிளம்பலாம் ரைட்…”
————————————-
“என்னடா மார்க் எடுத்திருக்கே.. 1098. இதை வச்சி நாக்குதான் வழிக்கனும்..”
“அப்பா.. எனக்கு டாக்டர் படிக்க பிடிக்கலப்பா.. நான் என்ஞினீரிங் படிக்கிறேன்பா.. எனக்கு ஜூவாலஜியே பிடிக்கலப்பா..”
“செருப்பால அடிப்பேன்.இதுக்கா உன்னை இவ்வளவு செலவு செஞ்சு படிக்க வைச்சேன்.. நீ டாக்டர்தான் ஆகணும்.. ஒருவருசம் லேட்டானாலும் இம்ப்ரூவ்மெண்ட் எழுதி நீ டாக்டரா ஆகணும்…”
————————————-
“அப்பா.. நான் 750 மார்க்தான் எடுத்திருக்கேன். என்னால் பி ஈ எல்லாம் படிக்க முடியாதுப்பா. ஏதாவது மல்டிமீடியா கோர்ஸ் படிக்கிறேன்பா..”
“இதோ பார் ராஜேஷ். நான் உன்னை எந்த மாதிரியும் வற்புறுத்தமாட்டேன். ஆனால் நீ என் மகன். ஏதாவது சாதிக்கனும்.. நீ எடுக்கிற எந்த துறயா இருந்தாலும் நீ ஒருத்தன் இருக்கேன்னு நீரூப்பிக்கனும்.. சரியா..?”
“ஆமாம் ராஜேஷ்.. உனக்கு என்ன பிடிக்குதோ அதை நல்லா செய்.. உறுதியா செய்.. நாங்க உனக்கு உறுதுணையா இருப்போம்..ஓகேவா..? ”
————————————
சென்னை, 5.10.2007 அன்று காலை 9 மணியளவில்..
——————————–
சென்னை வடப்பழநி முக்கிய சாலையில் ஒரு டாக்டர் பெய்ண்ட் மங்கிப்போன தன் ஹீரோ ஹோண்டாவில் வேகமாக பறந்துக்கொண்டிருக்கிறார்.. அவர் மனதில் “அய்யோ இப்பவே நேரமாச்சே.. இன்னிக்கும் பெரிய டாக்டரிகிட்ட மாட்டிக்கிட்டேன்..” என்று தன் விதியை நொந்தவாறு வேகமாக வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்குகிறார். படபடக்கும் வண்டியின் சத்தம்போல அவர் மனமும்….
அந்த முகம் எங்கோயோ பார்த்த முகம்.. அந்த முகத்துக்கு சொந்தக்காரர்………
——————————-
அதே சென்னை வடப்பழநி சாலையில் புத்தம் புதிதான ஸ்கோடாவின் உள்ளே ஐ மாக்கில் தன் விளம்பர படங்களை அனிமேசனில் எப்படி செதுக்கலாம் என்று சிந்தித்தவாறு ஒருவர்.. திரும்பி பார்க்கும டிரைவரிடம் சிநேகமான ஒருபுன்னகை பூத்தபடி மீண்டும் தன வேலையை தொடர்கிறார்..
அந்த முகம் எங்கோயோ பார்த்த முகம்.. அந்த முகத்துக்கு சொந்தக்காரர்………
————————————-