Posts filed under ‘சீன்மா’

படவிமர்சனம், Blood Diamond

ஒரே வரியில் சொல்வதென்றால், அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான படம். இந்த கதையில் தனியாக ஹீரோ என்று யாரும் கிடையாது, படக்கதை தான் ஹீரோ. வைரம் என்ற ஒரு கல், எத்தனை உயிர்களை பலி வாங்குகிறது என்று இதை விட அழகாக யாராலும் சொல்ல முடியாது.ஆப்ரிக்காவில் உள்ள ஒரு எளிய குடும்பத்தை காட்டுவதில் கதை தொடங்குகிறது, தன் மகனை சாலமன் வேண்டி(Djimon Hounsou) பள்ளிக்கு கூட்டி போக எழுப்புகிறார். போகும் வழியில் வைரக்கடத்தல் மாபியாவிடம் பிடிபடுகிறார்.

சாலமன் குடும்பத்தை விட்டு பிரிக்கப்பட்டு வைரம் எடுக்கும் கடினமான வேலையில் ஈடுபடுத்தப்படுகிறார், அங்கே வைரத்துக்காக ஆப்ரிக்கர்கள், ஆப்ரிகர்களாலேயே கொடுமைபடுத்தப்பட்டு கொல்லப்படுவதை நேரில் பார்க்கிறார். அவருக்கும் ஒரு அதிர்ஷ்டம் அடிக்கிறது, விலை மதிக்க முடியாத பிங்க் வைரம் கையில் கிடைக்கிறது- அதே சமயத்தில் வைரத்தை சட்ட விரோதமாக அறுவடை செய்வதை தடுக்கும் அரசு ராணுவத்தினர் வருவதினால் அங்கு வேலை பார்க்கும் அனைவரும் தப்பி ஓடுகின்றனர். உயிர் தப்பிக்க ஓடும் சாலமன்
தன் வைரத்தை ஒரு இடத்தில் புதைக்கிறார். இந்தக்கணத்திலிருந்து கதை வைரத்தை சுற்றி தவழ்கிறது. சாலமன் வைரத்தை புதைப்பதை ஒரு ஆப்ரிக்க மாபியா தலைவர் பார்த்துவிடுகிறார். அவர் மூலமாக சாலமனிடம் வைரம் இருப்பது ஒரு வதந்தி போல அனைவரிடமும் பரவுகிறது. அந்த வைரத்தை டானி ஆர்ச்சர்(Leonardo DiCaprio) கைப்பற்ற முனைகிறார்.

டானிக்கு ஒரு பெண் அமரிக்க நிருபர், மேடி(Jennifer Connelly), அறிமுகமாகிறார். டானியிடமிருந்து கடத்தல் ரகசியங்களை அறிய நினைக்கிறார். டானிக்கு மேடியை பிடித்திருந்தாலும் அவர் நிருபர் என்பதால் விலக நினைக்கிறார். சாலமனின் வைரத்தை கைப்பற்ற நினைக்கும் டானி சாலமனுடன் பேரம் பேசுகிறார். வைரத்துக்கு சாலமன் பேசும் விலை- சாலமனின் குடும்பம். தன்னுடைய குடும்பத்தை கண்டுபிடித்துக்கொடுத்தால் அந்த வைரத்தை கொடுத்துவிடுவதாக சாலமன் கூறுகிறார். சாலமனின் குடும்பத்தை ஒரு அகதிகள் விடுதியில் மேடியின் உதவியால் கண்டுபிடிக்கிறார்கள். சாலமனுடைய மகனை மட்டும் காணவில்லை, மகனை வைரக்கடத்தல் மாபியா பிடித்துக்கொண்டு போனதாக சாலமனின் மனைவி தெரிவிக்கிறார். சாலமனின் மகனை தேடி பயணம் தொடர்கிறது. கடைசியில் சாலமனின் மகனை ஒரு மாபியா கூட்டதில் கண்டுபிடிக்கிறார்கள். சாலமனின் மகன் கெட்ட ஆப்ரிக்க தலைவனால் மூளை சலவை செயப்பட்டதால் தந்தையுடன் வர மறுக்கிறார். மகனிடம் உருக்கமாக பேசும் சாலமன், மகன் மனதை மாற்றி தன்னுடைய வைரத்தின் உதவியால் எப்படி தன் குடும்பத்தோடு இணைந்து வைரக்கொள்ளையர்களையும் காட்டிக்கொடுக்கிறார் என்பது மீதிக்கதை.

கதையில் மிகவும் கவர்வது, முகத்தில் அறையும் உண்மை. ஒரு வைரத்தில் எத்தனை ஆப்ரிக்க சிறுவர்களின் இரத்தம் இருக்கிறது என்ற உண்மையை ஜீரனிக்கவே முடியவில்லை. ஆப்ரிக்க மாபியாக்களுக்கு ஆயுதத்தை சப்ளை செய்யும் மேல் நாட்டினர், எப்படி உள்நாட்டில் கலகத்தை தூண்டிவிட்டு அதன் மூலம் வைரக்கடத்தலில் பணம் சம்பாதிக்கிறார்கள், ஒரு மனிதர் மேல் மற்றொரு மனிதர் கொஞ்சம் கூட இரக்கம் காட்டுவதில்லை, பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற உறைய வைக்கும் உண்மையை அழகாக காண்பிக்கிறார்கள்.

படத்தின் ஸ்டார் டிகாப்ரியோ தான். டைடானிக் படத்தில் சாக்லெட் ஹீரோவாக வந்த ஜாக் டாஸனா இது என்று ஆச்சரியப்பட வைக்கிறார். அற்புதமான நடிப்பு, முரட்டுத்தனமான தோறம், தென் ஆப்ரிக்க ஆங்கில உச்சரிப்பு. அசல் தன் ஆப்ரிக்க வெள்ளையரை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். மேலும் வைரக்கடத்தல்காரர் + முன்னாள் இராணுவ வீரர் எனப்தால் உடல் வலுவில் அக்கறை செலுத்தி உடலை கூட அதற்கு ஏற்றது மாதிரி செதுக்கி இருக்கிறார்.

படத்தின் அடுத்த ஸ்டார் சாலமன், அவருடைய ஆப்ரிக்க முக அமைப்பு கோபம், இயலாமை, பழி உணர்ச்சி, கவலை, அழுகை, சந்தோஷம் போன்ற அத்தனை உணர்ச்சிகளையும் தெளிவாக காட்டுகிறது.

அடுத்ததாக ஜெனிப்பர், அழகான புத்திசாலி ஜர்னலிஸ்ட். கொடுக்கப்பட்ட வேலையை திறம் பட செய்திருக்கிறார். அவரை எல்லாம் பார்க்கும் போதும் வெறும் தலையை காட்டி, 4 பாட்டுக்கு நடனம் ஆடி, கவர்ச்சி காட்டி விட்டு காணாமல் போகும் நம் உள்ளூர் நடிகைகளில் பரிதாபமான நிலை மனதுக்குள் நிழலாடியது.

இதற்கு நான் நேரம் எடுத்து விமர்சனம் எழுதக்காரணம், அனைவரும் இந்த படத்தை ஒரு தரமாவது பார்த்து வைரம் உபயொகித்தலை விட்டு விட வேண்டும் என்று தான். இந்த கடத்தல் வைரங்கள், இந்தியாவுக்கு வரவழைக்கப்பட்டு, நல்ல வைரங்களோடு கலக்கப்பட்டு வெளி நாட்டு மார்க்கெட்டில் விடப்படுகிறது. எனவே ஆப்ரிக்காவில் சிந்தும் இரத்த துளிகள், இந்தியாவின் மீதும் தெறிக்கிறது. இதில் நல்ல வைரமும்(நேர்மையான வழியில் வாங்கிய வைரம்) இருக்கிறது ஆனால் இரண்டும் கலக்கப்படுவதால் கண்டுபிடித்தல் கடினம். அடுத்த முறை வைரம் வாங்க ஆசை ஆசையாக கடைக்கும் போகும் முன் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி இது, இத்தனை மனித உயிர்களை சித்தரவதை செய்து கொல்லப்பட்டு உருவான வைரம் நமக்கு தேவை தானா?

நன்றி : பேய்குட்டி

ஏப்ரல் 25, 2007 at 9:35 முப பின்னூட்டமொன்றை இடுக


ஜூன் 2021
தி செ பு விய வெ ஞா
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

அண்மைய பதிவுகள்